Wednesday, March 19, 2008

பிரசித்தி பெற்ற பிரமிடுகள்


செல்வச் செழிப்பிலே மிதந்து, பிறர் பார்த்து மெய்ச்சும்படியாய் வாழ்ந்தவர்கள், எகிப்தியர்கள். உயிருள்ளபோது மட்டுமா அவ்விதம் வாழ்ந்தார்கள்? இறந்த பின்னும் அவர்கள் செழிப்போடுதான் இருந்தார்கள்.
ஓர் எகிப்திய மன்னனோ சிற்றரசனோ பெருங்குடி மகனோ இறந்து போனால், அவனுடன் தங்கப்பாளங்கள், நவரத்தின மணிகள், விலைமதிப்பற்ற அணிகலன்கள், சப்ரகூட மஞ்சங்கள், அத்தர் புனுகு ஜவ்வாது போன்ற வாசனைத் திரவியங்கள் ஆகிய யாவற்றையும் அவர்களோடு வைத்துப் புதைத்துவிடுவார்கள்!. உயிரோடிருந்த போது அனுபவித்த சுகபோகங்களை இறந்த பின்னரும் அனுபவிப்பர் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்கள், எகிப்தியர்கள்.
அவர்கள் தம் கல்லறைகளைப் பெரிய அரண்மனை போன்று கட்டினார்கள். அவற்றைப் “பிரமிடுகள்” என்று பெயரிட்டு வழங்கினர் எகிப்தியர்கள். அவ்விதம் கட்டப்பட்ட பிரமிடுகள் எகிப்தில் ஆயிரக்கணக்கிலே இருந்தன. அவற்றுள் பல அழிந்தன. சில, அழிவுகளுக்குத் தப்பி, விண்முட்டும் அளவுக்குக் கம்பீரமாக நிற்பதை இன்றும் பார்க்கலாம்! அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு, அப்பிரமிடுகள் வேறுபட்ட அளவுகளில் விளங்குகின்றன.
எகிப்தில் இன்றுள்ள பிரமிடுகளுள் மிகப்பெரிதெனக் கருதப்படுவது கூஃபு என்னும் அரசனால் கட்டப்பட்ட பிரமிடுதான். அன்றும் சரி, இன்றும் சரி, அதனை மிஞ்சக்கூடிய பிரமிடு வேறு இல்லை என்று வரலாறு கூறுகிறது.
நாலாயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்தப்பிரமிடுவின் உயரம் 450 அடி ஆகும்! ஒவ்வொரு பக்கமும் 756 அடி அகலமும் கொண்டு நான்கு பக்கங்களும் முக்கோண வடிவிலே சிகரத்தை இணைத்துக்கொண்டுள்ளது. இதைக்கட்டுவதற்கு இருபத்து மூன்று லட்சம் அச்சுக்கற்களைத் தயாரித்தனர். அவை ஒவ்வொன்றும் இரண்டரை டன் எடையுள்ளவை. அந்தக்கற்களை இழுத்துக் கொண்டுவந்து சேர்ப்பதற்கு முரட்டு மிருகங்கள் பயன்படுத்தப்பட்டன. இதனைக் கட்டி முடிப்பதற்கு இருபது ஆண்டுகள் ஆயிற்று. இதனைக் கட்டி முடிப்பதற்கு வியர்வையும், இரத்தமும் சிந்திய அடிமைக்கூலிகள் இலட்சம் பேர்!கி.மு.2700-ல் வாழ்ந்த எகிப்தியரிடம் ஒரு நம்பிக்கை இருந்தது. தங்கள் அரசன் (பாரோ) சூரியதேவனின் பிள்ளை அவன் இறந்த பின்னர் அவனது சடலத்தை தக்கவிதத்தில் பாதுகாத்து வைக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் அவனால் நேரடியாகச் சொர்க்கத்திற்குச் சென்று வாழமுடியும். அவ்விதம் அவன் சொர்க்கத்திற்குச் செல்கின்ற போது, தங்க வைர நகைகளையும் கண்ணைப்பறிக்கும் வண்ண வண்ண ஆடையணிகளையும், நாற்காலி, மேசை, கட்டில் ஆகியவற்றையும் தன்னுடன் அம் மன்னன் எடுத்துச் செல்வான்.இவ்வாறு மக்கள் கருதியதால்தான், மன்னன் இறந்ததும் அவனைப் பாதுகாப்பாக வைப்பதற்கும், மேலே சொன்ன பொருற்களை வைப்பதற்கும், பிரம்மாண்டமான கல்லறையைக் கட்டினார்கள்.இந்தப் பிரமிடுகளிள் வைக்கப்படும் விலையுயர்ந்த ஆபரணங்களையும் தங்கப் பாளங்களையும் களவாடப் பல கொள்ளையர்கள் முயன்றனர். கட்டடக் கலைஞர்கள் சில உத்திகளைக் கையாண்டனர். அரசனின் கல்லறையை மூன்று நான்கு அடுக்குகளாகக் கட்டினர். கடைசி அடுக்கில் அரசனைக் கிடத்தினர். அவ்வாறு கட்டப்பட்ட கல்லறையைத் திறந்து, உள்ளே சென்று, கொள்ளையடிக்க எவரேனும் சென்றால் அவர் மீண்டும் உயிருடன் திர்ம்பி வர முடியாதபடி சுரங்கப்பாதை மூடிக்கொள்ளும். பிணமாய்க் கிடக்கும் அரசனுக்குத் துணையாக அவனும் பிணமாக வேண்டியதுதான்! அதனால், இன்றுவரை பிரமிடுகள் அழியாமலும், அவற்றினுள்ளே மண்டிக் கிடக்கும் செல்வங்கள் சூறையாடப்படாமலும் பாதுகாக்கப்பட்டுள்ளன.இன்றும் இப் பிரமிடுகள் சில, நைல்நதிக் கரையிலே, புராதனப் பெருமையைப் பறைசாற்றிக் கொண்டு கம்பீரமாய் நிற்கின்றன!

No comments: